கனேடிய அமைச்சர் ஒருவர், சமீபத்தில், கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்வோர்தான் காரணம் என்று கூறியிருந்தார்.
புலம்பெயர்தல் குறித்த, அரசியல்வாதிகள் சிலருடைய மன நிலைதான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால், பொதுமக்களுடைய மன நிலையும் புலம்பெயர்தலுக்கு எதிராக மாறியுள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
The Environics Institute மற்றும் the Century Initiative என்னும் இரு அமைப்புகள் இணைந்து, புலம்பெயர்தல் தொடர்பில் கனேடிய பொதுமக்களின் கருத்து என்னவாக உள்ளது என்பதை அறிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டன.
இந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 4ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், அதாவது சமீபத்தில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டில் இருந்ததைவிட, புலம்பெயர்தல் குறித்த மக்கள் கருந்து எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
2022இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது புலம்பெயர்தலுக்கு ஆதரவாக பதிலளித்தவர்களின் எண்ணிக்கை, தற்போது, அதாவது, 2023இல் மாறியுள்ளது. வீடுகள் தட்டுப்பாட்டுக்கும், கனேடியர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதற்கும் புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்னும் மனப்பாங்கு கனேடிய மக்களிடையே அதிகரித்துள்ளது.
கனடாவில் புலம்பெயர்தல் மிகவும் அதிகரித்துள்ளது என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, 10இல் 4 பேர் ஆம் என பதிலளித்துள்ளார்கள்.
வீடுகள் தட்டுப்பாடு குறித்த கவலை கொண்ட 64 சதவிகித வீட்டு உரிமையாளர்கள், கனடாவில் புலம்பெயர்தல் மிகவும் அதிகரித்துள்ளது என்று கருதுகிறார்கள்.
கனடா அதிக அளவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்கிறது என்னும் எண்ணம் கொண்ட கனேடியர்களில் 38 சதவிகிதம் பேர், வீடுகள் கிடைப்பதில் பிரச்சினை, வீடுகள் தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என கருதுகிறார்கள். இந்த கருத்து உடையவர்கள் எண்ணிக்கை 2022இல் இருந்ததைவிட 23 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவரக்ளில் 25 சதவிகிதத்தினர், புலம்பெயர்ந்தோர் வரிப்பணத்தை வீணாக்குவதாகவும், மேலும் 25 சதவிகிதத்தினர், புலம்பெயர்ந்தோரால் கனேடியர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகவும், 19 சதவிகிதத்தினர், புலம்பெயர்ந்தோரால் மக்கள்தொகை மிக அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் கருதுகிறார்கள்.
மொத்தத்தில், புலம்பெயர்தல் மீதான ஆதரவு, கனேடியர்களிடையே குறைந்துள்ளதையே இந்த ஆய்வு காட்டுகிறது.