Reading Time: < 1 minute

கனடாவுக்கு படிக்க வந்தால், படித்துமுடித்துவிட்டு உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்று கூறியுள்ளார் கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சர்.

கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு முதலான சில பிரச்சினைகள், கனடா பிரதமரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.

ஆகவே, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச மாணவர்கள் தொடர்பில் மேலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவர கனடா அரசு முயற்சி செய்துவருகிறது.

அதாவது, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களில் யார் கனடாவில் தொடர்ந்து தங்கியிருக்கலாம், யார் வெளியேறவேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.

அது குறித்து பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், கனடாவுக்கு படிக்க வருபவர்கள், படித்துமுடித்துவிட்டு தங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும், ஆனால், இப்போதைய நிலைமை அப்படி இல்லை என்று கூறியுள்ளார்.