கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன், இவர்களைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆயுததாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான்கூவர் புறநகர்ப் பகுதியான லாங்லி நகரில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார்? அவர் தனியாளகச் செயற்பட்டாரா? அல்லது பின்னணியில் எதும் குழுக்கள் உள்ளனவா? என்து குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இத்தாக்குதலால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பிராந்திய பொலிஸ் தலைமை கண்காணிப்பாளர் காலிப் பயானி கூறினார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் பலியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் அடையாளங்களை பொலிஸார் பகிரங்கப்படுத்தவில்லை.
கனடாவின் மிக மோசமான துப்பாக்கி வன்முறை ஒன்று கடந்த 2020 இல் நடந்தது. போலியான பொலிஸ் கார் போன்ற ஒன்றில் சென்ற துப்பாக்கிதாரி 13 பேரை சுட்டுக் கொன்றார். இதில் மேலும் 09 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.