Reading Time: < 1 minute

இந்திய அரசு தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூதரக மோதல் முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை.

காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து இருதரப்பு தூதரக உறவுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்னமும் அது தொடர்பான மோதல் தொடர்கிறது.

நேற்றும், இந்தியா கனடாவுக்கான தனது உயர் ஸ்தானிகரையும் சில தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.

அத்துடன், ஆறு கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், தொடர்ந்து இந்தியா மீது குற்றம் சாட்டிவரும் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசு தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ட்ரூடோ, கனேடிய அதிகாரிகள் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட முயன்றதாகவும், ஆனால், இந்திய அரசோ தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கியதுடன், கனடா அரசின் ஒருமைப்பாட்டையும் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.