கனடா தலைநகர் நோக்கி லொறிகள் ஊர்வலம் சென்றுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொறி சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என ட்ரூடோ நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து, எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான லொறிகள் தலைநகர் நோக்கி ஊர்வலம் சென்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடிக்க வாய்ப்பிருப்பதாக கூறி கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பல அடுக்கு பொலிசாரும் தேசிய பாதுகாப்பு படைகளும் இந்த விவகாரத்தில் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சு சுதந்திரம் என்பது மக்களின் உயிருடன் விளையாடுவதற்கல்ல என குறிப்பிட்டுள்ள அவர், இரண்டுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்றார்.
இந்த விவகாரத்தை எதிர்கொள்ள தங்களிடம் அனுபவம் மிக்க நிபுணர்கள் குழு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், அடிப்படைவாதிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால் கனடா பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் அதிகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, லொறி சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என அழுத்தமாக தெரிவித்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.