கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு கூட்டாட்சித் தேர்தல் செப்டம்பர் 20-ஆம் திகதி நடைபெறும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சைமனைச் சந்தித்த அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையை முன்வைத்தார்.
இதனையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய லிபரல் கட்சித் தலைவரான ட்ரூடோ, தனது கோரிக்கையை ஆளுநர் நாயகம் ஏற்று அங்கீகரித்ததாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து கனடாவின் 44 -ஆவது கூட்டாட்சி தேர்தலுக்காக பணிகளை அவர் முறையாகத் தொடங்கினார்.
தோ்தல் அறிவித்தலைத் தொடர்ந்து லிபரல் கட்சி வேட்பாளர்களை இணைய வழி நேரலை வீடியோ தொடர்பாடல் மூலம் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதேவேளை, தோ்தல் செப்டம்பர் -20-ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 36 நாட்கள் தோ்தல் பரப்புரைகள் இடம்பெறும். கனடிய தேர்தல் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் மிகக் குறுகிய கால பரப்புரைக்கான காலம் இதுவாகும்.
கனடாவில் டெல்டா திரிபு வைரஸ் தொற்று பரவல் 4-ஆவது அலைக்கு வித்திடும் என்ற அச்சத்துக்கு மத்தியில் கூட்டாட்சி தோ்தல் பிரச்சாரம் உடனடியாக ஆரம்பமாகிறது.
கனடாவின் தற்போதைய நாடாளுமன்ற ஆட்சிக் காலம் ஒக்டோபர் 2023 வரை உள்ள நிலையில் முன்கூட்டியே தோ்தலை நடத்தும் பிரதமர் ட்ரூடோவின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
எனினும்உறுதியான ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டியுள்ளது. உறுதியான அரசாங்கமே கனேடியர்களின் எதிர்காலத்தை தீா்மானிக்கும்.முக்கியமான காலகட்டத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும்?என்பதை கனேடியர்கள் தீர்மானிக்க வேண்டும் என என ஆளுநர் நாயகத்தைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ட்ரூடோ கூறினார்.
கொவிட் 19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க யார் ஆட்சியமைக்க வேண்டும்? என்பதை கனேடியர்களான நீங்கள் முடிவு செய்யுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
எங்கள் வெற்றிகரமாக தடுப்பூசி முயற்சிகளைத் தொடரலாமா? கொவிட் 19 நெருக்கடி கால எங்கள் உதவித் திட்டங்களை தொடரவேண்டுமா? என்பது உட்பட நம் நாட்டின் எதிர்காலத்தைத் தேர்வு செய்ய உங்களுக்கு உரிமை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தேசிய குழந்தை பராமரிப்பு திட்டத்தை உருவாக்குவதற்கான தனது கட்சியின் வாக்குறுதிகளையும் அவர் முன்னிலைப்படுத்தினார்.
கொவிட் தொற்று நோய்க்கு எதிரான போரை எதிர்கொள்ள உங்களின் ஆதரவு எனக்குத் தேவை. உங்களின் ஆதரவுடன் எங்களால் மேலும் தீவிரமாகச் செயலாற்ற முடியும் எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.