கனடா தேசிய நினைவு தினம் கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டல்களை பேணியவாறு நேற்று மிக அமைதியான முறையில் இடம்பெற்றது.
நாடங்கும் உள்ள போர் வீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவிடங்களில் நாட்டுக்காகப் போராடி இறந்த வீரர்களை நினைவுகூர்ந்து கனடியர்கள் மரியாதை செலுத்தினர்.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தேசிய போர் நினைவிடம் அருகே பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஷோபி ஜோஜியா ஆகியோருடன், ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் மற்றும் இராணுவப் பிரமுகர்கள் கூடி அஞ்சலி செலுத்தினர்.
கல்லறை அருகே சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்துபாதுகாப்புக் காரணத்தால் ஒட்டாவாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சில நிகழ்வுகள் சிறிது தடைப்பட்டன. பாதுகாப்பு பாரணங்களால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆளுநர் மேரி சைமன் ஆகியோர் திட்டமிட்டதை விட பல நிமிடங்கள் தாமதமாகவே நிகழ்வுக்கு வந்தனர்.
இதேபோன்று நாடு முழுவதும் மாகாணங்கள் மற்றும் பிரதேச ரீதியாக கனடியர்கள் ஒன்றுகூடி நாட்டுக்காகப் போராடி இறந்த வீரர்களை நினைவுகூர்ந்து கனடியர்கள் மரியாதை செலுத்தினர்.
கனடா தேசிய நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 அன்று கொண்டாடப்படுகிறது. 1918 இல் முதலாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கும் வகையில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கனடாவில் தேசிய நினைவு நாள் விடுமுறை மற்றும் கூட்டாட்சி சட்டரீதியான விடுமுறை தினமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.