ரொறோண்டோ புறநகரான வாண் பகுதியில் (Vaughan) ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் பணி புரிபவர் விஷ்ணுகோபன் சோதிலிங்கம்.
காலையில் கோப்பி வாங்குவதற்கென வாகன வரிசையில் வருபவர்களுக்கு கோப்பியுடன் மகிழ்ச்சி கலந்த வரவேற்பையும் கொடுத்து அவர்களது முழு நாளையும் உற்சாகமாக ஆக்கிவிடுவதில் விஷ்ணு படு சுட்டி. விஷ்ணு இந்த முகமலர்ந்த வரவேற்புடன் கூடவே அன்றய பிரதான செய்திகளையும், காலநிலை அறிவுப்புக்களையும் தருகிறார். அவரைப் பார்த்து முகமன் கூறி, அவரது கையால் கோப்பியை வாங்கிக் குடிப்பதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறார்கள் பல வாடிக்கையாளர்கள்.
மற்றவர்களை மகிழ்விக்கும் பலரது வாழ்வில் மறைந்திருக்கும் ஏதோ ஒரு சோகக்கதைப் போல நம்ம ‘ஹீரோ’வின் வாழ்க்கையிலும் இருப்பதை ஒரு வாடிக்கையாளர் அறிந்துவிட்டார்.
பாத்ஹேர்ஸ்ட் / ரதர்ஃபோர்ட் சந்திப்பிலுள்ள ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் வாகனசாரிகளுக்கு கோப்பி வழங்கும் விஷ்ணு கோபன் ஒரு படித்த இளைஞர். யோர்க் பல்கலைக்கழகத்தில் தகவற்தொழில்நுட்ப இளமாணிப் படிப்பை ஆரம்பித்த விஷ்ணுகோபன் பண முடையால் படிப்பைத் தொடரமுடியாமல் கோப்பிக் கடையில் வேலைக்குச் சேர்ந்த விடயத்தை வாடிக்கையாளர் ஒருவர் அறிந்துவிட்டார். இதனால் மனம் கனிந்துபோன அந்த வாடிக்கையாளர் விஷ்ணுகோபன் கல்வியைத் தொடரவேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டார்.
மத்தியூ ஷுல்மான் என்ற இந்த வாடிக்கையாளர், விஷ்ணுகோபனின் கல்விக்காக ‘GoFundMe’ தளத்தின் மூலம் நிதி சேர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். தன்னை அறியாதோர் வாழ்வில் தினமும் மகிழ்ச்சியையும் உந்துசக்தியையும் தந்துகொண்டிருக்கும் அந்த இளைஞனது வாழ்வில் ஒளியேற்றிவைக்க அவர் கங்கணம் கட்டியுள்ளார்.
“விஷ்ணுகோபன் எங்களது நாட்களைப் பூரணமாக்குகின்றார். கோப்பி வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போது அவர் தோழர்களைச் சந்திப்பதுபோல் மொழிகளால் முட்டி, காலநிலை விடயங்களைப் பகிர்ந்து எங்களை முகமலரச் செய்து அனுப்ப்புகிறார். அது எனக்கு மட்டுமல்ல சகல வாடிக்கையாளருடனும் அவர் அப்படித்தான் பழகுகிறார். அவருக்காகவே பலரும் அங்கு கோப்பி வாங்கச் செல்கிறார்கள்” என்கிறார் ஷுல்மான்.
விஷ்ணுகோபன் பணமுடையால் கல்வியைத் தொடரமுடியாமற் போனதை அறிந்த ஷுல்மான் அவருக்காக ‘GoFundMe’ மூலம் “Vishnu The Tim Horton’s Happy Fist Bumper!” என்ற பெயரில் நிதிசேர்க்க ஆரம்பித்திருக்கிறார்.
“இந்த நிலையற்ற காலத்தில் விஷ்ணு எப்போதுமே வாழ்வில் பிரகாசம் தரும் ஒளியாகத் திகழ்கிறார். பலரும், என்னைப் போலவே பலரும் அவரது கோப்பிக்கும், மொழி முட்டுதலுக்கும், அகன்ற சிரிப்புக்கும், உலகளாவிய மேற்கோள்களுக்கும், காலநிலை அறிவிப்புகளுக்கும், நகைச்சுவைக்குமாக அங்கு போகின்றார்கள்.
“விஷ்ணு ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் முகக்கவசத்திற்குப் பின்னாலுள்ள ஒரு சாதாரண ஆளல்ல, அவர் ஒரு அற்புதமான மனித குலத்தவர். அவர் தனது கல்வியைத் தொடர, நாம் எப்படியான பங்களிப்பைச் செய்கிறோமென ஒரு சமூகமாக நாம் காட்ட வேண்டும்” என்கிறார் ஷுல்மான்.
விஷ்ணுகோபன் கல்வித்திட்டத்துக்காக ஷுல்மான் சேகரிக்க உத்தேசித்த தொகை $10,000. இத் தகவல் கிடைக்கும்போது அத் தொகை $9.300 இற்கு மேல் சேர்ந்துவிட்டது. 200 பேர் இதுவரை பங்களித்திருக்கிறார்கள்.
இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது “நான் செய்யும் அற்ப விடயங்களைக்கூட மக்கள் எவ்விதம் மதிக்கிறார்கள் என்பதைக் காண ஆச்சரியமாக இருக்கிறது. நான் மக்களை நேசிக்கிறேன். மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுவே என்னால் தரக்கூடிய பிரதியுபகாரம். அதுவே நான்” என்கிறார்.
கோப்பிக்கடைக்கு வெளியே ஷுல்மான் கொடுத்த காசோலையைப் பெற்றுக்கொண்டு அவருக்கு ‘டோணட்’ டுகளப் பரிமாறி மகிழ்ந்தார் விஷ்ணுகோபன்.
Source: CBC News