அமெரிக்காவின் பிடியாணை உத்தரவின் கீழ் கனடாவில் கைது செய்யப்பட்டு 3 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த சீனா – குவாவி தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ சீன அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விமானத்தில் நேற்று சனிக்கிழமை இரவு சீனாவை வந்தடைந்தார்.
இரவு 10 மணியளவில் ஷென்சென் சர்வதேச விமான நிலையத்தில் அவரது விமானம் தரையிறங்கியது.
விமான நிலையத்தில் மெங்கின் குடும்பத்தினர். சீன மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், குவாவி நிறுவன சகாக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கூடியிருந்து சீனக் கொடிகளை அசைத்து , மகிழ்ச்சி ஆரவாரம் செய்து மெங் வான்சோவை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் சுருக்கமாகப் பேசிய மெங் வான்சோ, “1,000 நாட்களுக்கு மேலான சித்திரவதைக்குப் பிறகு நான் தற்போது தாய்நாட்டின் அரவணைப்பில் இருக்கிறேன்” என்று கூறினார்.
மகிழ்ச்சி ஆரவாரம் செய்த கூட்டத்தினரை நோக்கி “நான் தாயாகம் திரும்பிவிட்டேன், மகிழ்ச்சியாக இருக்கிறேன் ” என மெங் கோஷமிட்டார்.
ஒவ்வொரு சீன குடிமகனின் பாதுகாப்பிலும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் அக்கறை காட்டுகிறார். இதனை நான் ஆழமாக உணர்ந்தேன் என்று மெங் கூறினார். ஒரு சாதாரண சீன நபராக, நான் என் தாய்நாடு குறித்து பெருமைப்படுகிறேன் எனவும் அவா் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் -01 அன்று அமெரிக்க ஒப்படைப்பு கோரிக்கையின் பேரில் மெங் வான்சோ வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கனடாவால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, சீன உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டே மெங் வான்சோ கைது செய்யப்பட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் தெரிவித்துள்ளார்.
மெங்கிற்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகள் முற்றுமுழுதான புனைகதையே தவிர வேறொன்னும் இல்லை என்று அவர் கூறினார்.