கனடாவில் கோவிட்19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்கும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குமான திட்டங்களுக்கு கனேடிய அரசு உதவிகளை அதிகரிக்கும். அத்துடன், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கோவிட்19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் கனடா நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில் கனடாவின் சொந்த தடுப்பூசி மற்றும் மருத்துவ திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார்.
கோவிட்19 தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவும், தரமான சிகிச்சைகளை வழங்கவும், தொற்று நோயை எதிர்த்துப் போராடத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கான எங்கள் திறனை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் கனடா அரசு துரிதமாகச் செயல்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்று நோயில் இருந்து கனேடியர்களைப் பாதுகாக்க கனடாவின் சொந்த தடுப்பூசி திட்டங்களில் முதலீடு செய்வதும், எதிர்காலத்தில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு கனடாவை தயார் நிலையில் வைத்திருப்பதும் இந்தத் திட்டங்களின் நோக்கமாகவும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மொன்றியலில் உள்ள கனடாவின் உயிரியல் தொழில்நுட்ப மையத்தின் தேசிய ஆராய்ச்சி பேரவை அதன் கோவிட் -19 தடுப்பூசியை தயாரிக்கும் பணிகளைத் தொடரும் நோக்கில் நோவாவாக்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிவித்துள்ளார்.
கனடாவில் கோவிட்19 தடுப்பூசி, சிகிச்சை செயற்றிட்டங்களை ஆதரிப்பதற்கான முதலீடுகளையும் பிரதமர் அறிவித்தார்.
கனடா அரசு எப்போதும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை எடுக்கும். இதனால்தான் கோவிட்-19 தடுப்பூசி ஆய்வு, சிகிச்சை மற்றும் தொற்று நோயை எதிர்த்துப் போராடத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டங்களில் அரசாங்கம் அதிக முதலீடுகளைச் செய்யும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கூறினார்.
கனேடியர்களைப் பாதுகாப்பதற்கும், தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் கனேடிய நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்ந்து கூட்டுச் சோ்ந்து செயற்படுவோம். இதன்மூலம் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான ஒரு நாட்டை நாம் ஒன்றாக உருவாக்க முடியும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.