கனடா செல்லும் ஆசையிலிருந்த இந்தியர் ஒருவர், முன்பின் தெரியாத பெண்ணொருவரின் வார்த்தைகளில் மயங்கி பணம் அனுப்பி ஏமாந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் நகரைச் சேர்ந்தவர் கல்யாண் குமார் குப்தா. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் குப்தாவுக்கு கனடா செல்ல விருப்பம் உள்ளது.
ஃபேஸ்புக்கில் கனடா செல்வது தொடர்பான விளம்பரம் ஒன்றைப் பார்த்த குப்தா, அதில் கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்புகொள்ள, ஏஞ்சல் ஆண்டர்சன் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஒரு பெண் அவருடன் உரையாடியுள்ளார்.
விசா மற்றும் விமான பயணச்சீட்டுக்காக 23,600 ரூபாய் அனுப்பும்படி அந்த பெண் கேட்க, குப்தா அந்த பணத்தை அந்தப் பெண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கேட்ட உடன் பணம் வரவே, அந்தப் பெண்ணும் சரியான ஏமாளி ஒருவர் மாட்டினார் என்பதைப் புரிந்துகொண்டு, பல்வேறு கட்டணங்கள், வரி என மீண்டும் மீண்டும் பணம் கேட்க, குப்தா மொத்தம் ஒரு லட்சத்து 81ஆயிரத்து 300 ரூபாய் அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு அந்தப் பெண் குப்தாவுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்துகொண்ட குப்தா, பொலிசாரிடம் புகார் செய்துள்ளார். பொலிசார் அந்த புகார் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.