ரொறன்ரோவில் TTC சுரங்க ரயிலில் இஸ்லாமிய பெண் மீது கத்தியை காட்டி மிரட்டி நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
தொடர்புடைய மிரட்டல் சம்பவம் மார்ச் 9ம் திகதி மதியத்திற்கு மேல் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் தெரிவிக்கையில், தெற்கு பகுதி நோக்கி புறப்பட்டு சென்றுள்ள சுரங்க ரயிலில், பாதிக்கப்பட்ட பெண்ணை நபர் ஒருவர் நெருங்கி, பேச்சுக்கொடுத்துள்ளார்.
தொடர்ந்து கோபமாக பேசத்தொடங்கிய அந்த நபர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டியதாகவும், இதில் உயிர் பயத்தில் அலறிய அந்த இஸ்லாமிய பெண் வில்சன் ரயில் நிலையத்தில் வைத்து வெளியேறி தப்பித்துக்கொண்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்லாமியர் என்பதாலையே குறித்த பெண் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தரப்பு நம்புவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க இருப்பதாகவும்,
இது வெறுப்புணர்ச்சியால் ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ள பொலிசார், அந்த நபர் 50 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர் எனவும் நீளமான வெண் தாடி வைத்திருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அவரிடம் ஆயுதம் இருப்பதால் அவர் ஆபத்தானவர் எனவும், தொடர்புடைய நபரை எதிர்கொள்ள நேர்ந்தால் 911 இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் பொதுமக்களுக்கு பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் அந்த நபரின் புகைப்படத்தையும் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.