கனடா நாட்டில் சில பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் (Strawberry Fruit) மூலமாக ஹெப்படைடிஸ் என்னும் நோய் பரவுவதாக வெளியான தகவலையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காச்சுவான் மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, இறக்குமதி செய்யப்பட்ட ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் இந்த நோய் பரவலின் பின்னணியில் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஹெப்படைடிஸ் நோய் உருவாகும் முன் பலரும் தாங்கள் இந்த இறக்குமதி செய்யப்பட்ட ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள், மார்ச் 5ஆம் திகதிக்கும் 9ஆம் திகதிக்கும் நடுவில் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ள நிலையில், இப்போது அவை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்களில் அந்த ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை யாராவது வாங்கியிருந்தால், அவற்றை பிறகு பயன்படுத்தலாம் என சேமித்துவைத்திருந்தால், அவற்றை உண்ணவேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.