கனடாவில் முன்னாள் பழங்குடி குடியிருப்பு பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதுடன், காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு கனேடிய அரசாங்கத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
கம்லூப்ஸ் முன்னாள் இந்தியன் குடியிருப்பு பள்ளியின் புதைகுழியில் இருந்து 215 சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியூட்டுகிறது. இது பாதிக்கப்பட்ட மக்களிடையே மீண்டும் வலி மற்றும் காயங்களை ஏற்படுத்தியுள்ளது என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செய்தித் தொடா்பாளர் மார்டா ஹர்டடோ தெரிவித்துள்ளார்.
பொருத்தமான இழப்பீட்டை உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்துக்கு உத்தியோகபூர்வ மன்னிப்பு கோரப்பட வேண்டும். அத்துடன் நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் ஹர்டடோ சுட்டிக்காட்டினார்.
கனடாவில் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விசாரணை நடத்தி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட பழங்குடி பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் பழங்குடி மக்கள் தலைவர்களுடன் இணைந்து இந்த விவகாரம் குறித்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன், புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தை எந்த மாற்றங்களும் இன்றி பாதுகாக்க வேண்டும்.
அவை குறித்து மேலதிக ஆய்வுகளை நடத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் ஐக்கிய நாடுகள் சபை உதவும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செய்தித் தொடர்பாளர் மார்டா ஹர்டடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.