கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு கோவிட் காலகட்டத்தில் அகற்றப்பட்ட கட்டுப்பாடு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணிபுரிய அனுமதிப்பதால், அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி புரிவதற்காக மாறிவிடுகிறது என கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வாரத்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
கோவிட் கால கட்டத்தில் கனடாவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதை சமாளிக்க கல்வி கற்கும் மாணவர்கள் வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் என்னும் கட்டுப்பாடு அகற்றப்பட்டுள்ளது. எனினும், அந்த விதி இன்றுடன் (30) முடிவுக்கு வந்துள்ளது.
இனி, கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள், வாரத்துக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி உண்டு என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த அனுமதி, செப்டெம்பர் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் எனவும், செப்டெம்பர் மாதத்திற்கு பிறகு அதனை 24 மணி நேரமாக அதிகரிக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.