கனடாவின் பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் வேட்பாளர்களாக களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர்.
கனடாவில் 2025ம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிரதமராக பதவியில் இருந்த ஜெஸ்டின் ட்ரூடோவுக்கு ஆளும் லிபரல் கட்சியில் கடும் எதிர்ப்பு எழவே அரசியல் காட்சிகள் மாறின.
தனது பதவியை ஜெஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துவிட பெரும்பான்மை ஆதரவுடன் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்த அவர், ஏப்ரல் 28ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்க, மறுபக்கம் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களும் வெளியாகி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக வழக்கத்தை விட இம்முறை கனடா தேர்தலில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்.
பல ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளின் அரசியல் களத்தில் பஞ்சாப்-கனடா அரசியல்வாதிகள் அறிமுக முகங்களாக இருந்த நிலையில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த குஜராத்தியர்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தும் இத்தகைய நிகழ்வு ஒரு புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
பிராம்ப்டன் தொகுதி முதல் கால்கரி வரை, 4 குஜராத் வம்சாவளி வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இவர்கள் முதல் தலைமுறை குடியேறியவர்கள், முதல்முறையாக பாராளுமன்ற தேர்தல் களத்தில் நுழைகின்றனர்.