Reading Time: < 1 minute

அமெரிக்காவுடனான எல்லைக் கட்டுப்பாடு ஜூலை -21 வரை மீண்டும் ஒருமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்தார்.

கனடா -அமெரிக்கா எல்லையைத் திறக்குமாறு அமெரிக்க அரசுக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அதிகளவு கனேடியர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்ட பின்னரே எல்லையைத் திறக்கும் முடிவில் கனடா உறுதியாக உள்ளது. தற்போது 20 வீதத்துக்கு குறைவான கனேடியர்களே முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் இன்னும் தொற்று நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். இதனை முழுமையாகக் கட்டுப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கூறினார்.

அத்துடன், எல்லையைத் திறக்க முன்னர் 75 வீதமான கனேடியர்களுக்கு ஒற்றைத் தடுப்பூசியும் குறைந்தது 20 வீதம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் போட வேண்டும் என இலங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரூடோ தெரிவித்தார்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களால் சமூகங்களுக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவா் தெரிவித்தார்.

கனடா-அமெரிக்கா எல்லை அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக 2020 மார்ச் மாதம் மூடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் எல்லை மூடல் அறிவிப்பு நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.