Reading Time: < 1 minute

கனடாவில் அமெரிக்க எல்லைக்கு அருகில் உள்ள பனிமூட்டமான வயல்வெளியில் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேரின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

கடுமையான குளிர் காரணமாக இவா்கள் இறந்துள்ளனர். இந்தப் பகுதியில் -35C கடும் குளிர் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை மனிடோபாவின் எமர்சன் அருகே ஒரு ஆண், ஒரு பெண், பதின்ம வயதையுடைய ஒரு இளைஞன் மற்றும் ஒரு கைக்குழந்தையின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இறந்தவர்கள் இந்தியாவைச் சேர்ந்த குடும்பம் என்று நம்பப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனேடிய ஆர்.சி.எம்.பி. பொலிஸ் மனிடோபா பிராந்திய உதவி ஆணையர் ஜேன் மக்லாச்சி, இந்த துயர சம்பவம் குறிந்த விவரங்களை பகிர்ந்து கொண்டார். இது இதயத்தை நொருக்கும் பெரும் துயரம் என அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குடும்பம் சட்டவிரோதமாக கனேடிய எல்லை ஊடாக அமெரிக்காவிற்குள் நுழையும் முயற்சியின்போது கடும் பனிப் புயலில் சிக்கியது. கடும் குளிர் மற்றும் கடும் இருளில் சிக்கி மீள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுவதாகவும் ஜேன் மக்லாச்சி கூறினார்.

இதேவேளை, இந்தக் குடும்பம் சட்டவிரோதமாக எல்லையை கடக்க உதவிய குற்றச்சாட்டில் புளோரிடாவில் வசிக்கும் 47 வயதான ஸ்டீவ் ஷாண்ட் என்பவர் நேற்று மினசோட்டாவில் கைது செய்யப்பட்டார். இவா் மீது மனித கடத்தல் குற்றச்சாட்டுகளை அமெரிக்க கூட்டாட்சி அதிகாரிகள் மீது பதிவு செய்துள்ளனர்.

15 பேரை அமெரிக்கா – கனடா எல்லையில் ஒரு வானில் ஸ்டீவ் ஷாண்ட் ஏற்றிச் சென்றது கண்டறியப்பட்டது. அதில் இருந்த அனைவரும் இந்தியாவைச் சேர்ந்த ஆவணங்கள் அற்ற சட்டவிரோத குடியேற்றவாசிகள் எனத் தெரியவந்தது.

ஒரு எல்லை சோதனைச் சாவடிக்கு அருகே 5 இந்தியர்கள் அடங்கிய குழுவினர் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர். 11 மணி நேரம் நடந்து வருவதாகவும், யாரோ ஒருவர் தங்களை அழைத்துச் செல்ல வருவதாக உறுதி அளித்ததாகவும் அவர்கள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணையின்போது தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் குழந்தைகளுக்கான ஆடைகள், பொம்மைகள் மற்றும் மருந்துகள் அடங்கிய பையை வைத்திருந்தார். அதை நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்காக எடுத்துச் செல்வதாகக் கூறியிருந்தார். எனினும் இந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் இந்தக் குழுவிடம் இருந்து இரவில் பிரிந்துவிட்டது.

விசாரணைகளில் இந்தப் 15 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து வந்த 4 பேரே சடலங்களாக மீட்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மோசமாக காலநிலைக்கு மத்தியில் ஆபத்தான வகையில் எல்லைகளைக் கடக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என கனேடிய ஆர்.சி.எம்.பி. பொலிஸ் மனிடோபா பிராந்திய உதவி ஆணையர் ஜேன் மக்லாச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்களை பத்திரமாக கொண்டு சேர்க்க முடியும் என பணத்துக்காக ஆட்கடத்தல்காரர்கள் கூறுவதை நம்பாதீர்கள். குளிரைத் தாக்குவதற்கான சரியான ஆடையுடன் கூட தற்போதைய சூழலில் சட்டவிரோத பயணங்கள் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.