கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், கனடாவுக்கு பயணத்தடை விதித்துள்ளது இஸ்ரேல்.
கனடா, அமெரிக்கா உட்பட 8 நாடுகளுக்கு குறித்த பயணத்தடை பொருந்தும் என திங்களன்று இஸ்ரேல் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சரவை கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்புக்கு பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பிரதமர் Naftali Bennett அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சிவப்புப்பட்டியலில் இணைத்துள்ளது மிக அரிதான முடிவாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதே நோக்கமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதி முடிவை நாடாளுமன்ற குழு அறிவித்த பிறகு புதன்கிழமை முதல் பயணத்தடை அமுலுக்கு வரும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஓமிக்ரான் பரவல் காரணமாக உலகின் முதல் நாடாக தேசிய எல்லைகளை இஸ்ரேல் மூடியது.
மட்டுமின்றி, நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே பயணிகளுக்கு கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது. வெளிநாட்டவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதை தடை செய்துள்ளதுடன், நாடு திரும்பும் இஸ்ரேலிய மக்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்தலும் விதித்துள்ளது.
கனடா, அமெரிக்கா நாடுகளுடன் முக்கிய ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, மொராக்கோ, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கியும் இஸ்ரேலிய நிர்வாகத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.