Reading Time: 2 minutes

இலங்கையின் இரு ஜனாதிபதிகளிற்கு எதிராக கனடா விதித்துள்ள தடையை ஏனைய நாடுகளும் பின்பற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி(Meenakshi Ganguly) தெரிவித்துள்ளார்.

கனடா அரசாங்கம் இலங்கையின் இரு சகோதரர்களான ஜனாதிபதிகளிற்கும் இரு படைவீரர்களிற்கும் எதிராக தடைகளை விதித்துள்ளதன் மூலம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் 1983 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மோசமான திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டங்களை மீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான தீர்க்ககரமான நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது என அதன் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜோலி(Melanie Joly) தெரிவித்துள்ளார் என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டம் உட்பட 2005 முதல் 2015 வரை இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்தார் என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி இறுதி யுத்த காலப்பகுதியிலேயே இலங்கையின் பாதுகாப்பு படையினர் மிக பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சினை மேற்கொண்டது தானே பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை கொலை செய்தது காயப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட பல போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டார்கள் காணாமல்போயுள்ளனர் என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி ஐக்கிய நாடுகள் ஊடகங்கள் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் ஏனைய குழுக்கள் அரசபடையினரும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இழைத்த குற்றங்களை நன்கு பதிவு செய்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவிற்கு வந்தவேளை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவர் யுத்த குற்றங்களிற்கு அப்பால் பத்திரிகையாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கொலை குறித்த குற்றச்சாட்டுகளும் இவருக்கு எதிராக உள்ளன என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளதுடன் 2019 இல் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் அவர் பொருளாதாரத்தை மோசமாக கையாண்டதால் பாரிய ஆர்ப்பாட்டங்கள் உருவாகின இதன் காரணமாக அவர் 2022 ஜூலையில் பதவி விலகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

தடை விதிக்கப்பட்டுள்ள ஏனைய இருவரில் ஒருவர் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரட்நாயக்க இவர் 2000 ம் ஆண்டு ஐந்து வயது சிறுவன் உட்பட 8 தமிழர்கள் படுகொலை செய்யப்ப்ட்ட மிருசுவில் படுகொலைகளிற்காக 2015 இல் தண்டனை விதிக்கப்பட்டார்,இவருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 2020 இல் பொதுமன்னிப்பு வழங்கினார் என மீனாக்சிகங்குலி தெரிவித்துள்ளார்.

மற்றையவர் முன்னாள் கடற்படை அதிகாரி சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி இவர் கடற்படையால் 10 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுகள் உள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் வேண்டுகோள்கள் நீண்ட காலமாக செவிமடுக்கப்படாத நிலையில் உள்ளன என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி குற்றங்கள் இழைக்கப்பட்டவேளை ஒட்டுமொத்த கட்டளை பீடத்திற்கு பொறுப்பாகவிருந்தவர்களை முதல் தடவையாக இலக்குவைத்துள்ளதால் கனடாவின் தடைகள் மிக முக்கியமானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய அரசாங்கங்கள் இதனை பின்பற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன் பாரிய மீறல்களிற்கு காரணமானவர்களை அவர்களின் தலைமைத்துவ பணி எவ்வாறானதாகயிருந்தாலும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதன் மூலம் நீதியை நிலைநாட்டும் முக்கிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.