கனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், தேடப்பட்டுவந்த இரண்டாவது சந்தேக நபரும் பொலிஸாரால் பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
32 வயதான மைல்ஸ் சாண்டர்சன், நேற்று (புதன்கிழமை) பிற்பகல் சஸ்காட்சுவான் மாகாணத்தில் ஒரு நெடுஞ்சாலையில் அதிவேக துரத்தலுக்குப் பிறகு உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாண்டர்சன் ஒரு வாகனத்தைத் திருடியது குறித்து பொலிஸ்துறைக்கு முந்தைய நாள் புகார் கிடைத்ததாகவும், இதன்பின்னர் தீவிரமாக தேடிவந்த பொலிஸார், அவரை ரோஸ்டெர்ன் நகருக்கு அருகே ஒரு வெள்ளை நிற எஸ்.யு.வி.இல் வைத்து கைது செய்ததாகவும் உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் தெரிவித்தார்.
அவரை கைது செய்ய முயற்சி செய்த போது, குறித்த வாகனம் பள்ளத்தில் குடைசாய்ந்;தாகவும் அதிலிருந்து அவரை மீட்ட பொலிஸார், அவரை கைது செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
ஆனால், கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, சாண்டர்சன் சாஸ்கடூனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் அங்கு உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் மேலும் விபரங்களை வழங்கவில்லை, அவரது மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை மூலம் தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக, பெயரிடப்படாத அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம், சாண்டர்சன் சுயமாக ஏற்படுத்திய காயங்களால் இறந்ததாக தெரிவித்தார்.
முன்னதாக 31 வயதான டேமியன் சாண்டர்சனின் உடல் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷனில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடாவின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான வன்முறைச் செயல்களில் ஒன்றாக பார்க்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், 10பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.