Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கனடா எல்லை பகுதியில் தனது படையினை நிறுத்தும் அமெரிக்காவின் யோசனைக்கு கனடா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் குறித்த முன்னெடுப்பு தேவையற்ற ஒன்று எனவும், குறித்த நடவடிக்கையினால் இரு தரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு எனவும் கனடா நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்துடன் கடந்த 18 மாதங்களாக தாம் நல்ல உறவினை பேணிவரும் நிலையில், சமரசமற்ற குறித்த கருத்தினால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக கனடா மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எளிதாக்க கனடா – அமெரிக்க எல்லையினை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பயன்படுத்தாத வகையில் மூடுவதற்கு கடந்த வாரம் இரு அரசாங்கங்களும் தீர்மானித்திருந்தன.

எனினும், அமெரிக்கா குறித்த திட்டத்தினை பரிசீலனை செய்யும் நடவடிக்கையினை கைவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கனடாவானது நூற்றுக்கணக்கான படையினரை தற்போது எல்லைக்கு அனுப்புவதற்கு தயாராக இல்லையென கனேடிய துணை பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்தினை கனடா தீர்மானமாக எதிர்ப்பதாகவும், தமது நிலைப்பாட்டினை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க்காவின் குறித்த முடிவானது முற்றுமுழுதாக தேவையற்ற ஒன்று எனவும், இம்முடிவானது இரு தரப்பு உறவினையும் பாதிப்பதற்க்காக மேற்கொள்ளப்படும் ஒன்றாகவே தாம் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களின் சுகாதார நிலையானது இவ்வாறான ஓர் தீர்மானத்தினை எடுப்பதற்கான சாதகமான நிலையில் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், எவ்வாறாயினும் இது தொடர்பான தனது இறுதி முடிவு என்ன என்பதை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.