ட்விட்டரைத் தொடர்ந்து மெட்டா நிறுவனமும் தனது ஊழியர்கள் 11,000 பேரை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது.
சிலருக்கு இது செய்தி, பலருக்கு வாழ்க்கை; இதுபோல ஒரு நிறுவனம் ஆயிரக்கணக்கானவர்களை வீட்டுக்கு அனுப்பும் விடயம், பலருக்கு வெறும் செய்தியாக இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் வலி அவர்களுக்கு மட்டுமே புரியும்.
ஆம், அப்படி மெட்டா நிறுவனத்தால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒரு இந்தியரின் பரிதாபக் கதை இது.
ஹிமான்ஷு (Himanshu V) என்னும் அந்த இந்தியர் மெட்டா நிறுவனத்தில் இணைந்து இரண்டு நாட்கள்தான் ஆகியிருக்கிறது.
அதைவிட மோசம், அவர் அந்த வேலைக்காக இந்தியாவிலிருந்து சமீபத்தில்தான் கனடாவுக்கு வந்திருக்கிறார்.
அதிர்ச்சியில் உறைந்துள்ள மென்பொருள் பொறியாளர்
மென்பொருள் பொறியாளரான ஹிமான்ஷு, தான் கனடாவுக்கு வந்து மெட்டா நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து இரண்டே நாள் ஆன நிலையில் வேலை இழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருக்கிறார். தன்னைப்போலவே சிக்கலான சூழலில் இருக்கும் மற்றவர்களை தன் மனம் எண்ணிப்பார்ப்பதாக தெரிவிக்கும் அவர், அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும், தனக்கு ஏதாவது வேலை காலியிடம் இருந்தால் கூறுமாறும் சமூக ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவரது இடுகையைப் படித்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருவதுடன், மென்பொருள் பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் குறித்த தகவல்களையும் அவருடன் பகிர்ந்துவருகிறார்கள்.