கனடா, இன்று முதல் நாட்டுக்குள் நுழையும் பயணிகளுக்கான பல்வேறு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது..
ஆனாலும், கனடாவுக்கு பயணம் புறப்படுவதற்கு முன் செய்யப்படவேண்டிய கொரோனா பரிசோதனை முதலான சில விதிகள் தொடர்கின்றன.
என்னென்ன விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்
பிசிஆர் பரிசோதனைக்கு பதிலாக இனி ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொள்ளலாம்
சென்ற ஆண்டு, கனடாவுக்குள் நுழையும் பயணிகள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கு ஆதாரமாக, பிசிஆர் போன்ற மூலக்கூறு வகை கொரோனா பரிசோதனை செய்து அதன் முடிவை சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயம் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால், இன்று (திங்கட்கிழமை) முதல், பிசிஆர் பரிசோதனைக்கு பதிலாக ஆன்டிஜன் பரிசோதனையும் (rapid antigen test) செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டிஜன் பரிசோதனை பிசிஆர் பரிசோதனையைவிட கட்டணம் குறைவானதாகும். எளிதான பரிசோதனை என்பதுடன், அதன் முடிவுகளும் சில நிமிடங்களுக்குள் கிடைத்துவிடும்.
வெளிநாட்டிலிருக்கும்போது கொரோனா தொற்றுக்காளானவர்களுக்கான விதியில் மாற்றம் இல்லை
வெளிநாட்டிலிருக்கும்போது கொரோனா தொற்றுக்காளானவர்கள், கனடாவுக்குள் நுழைவதற்கு முன் குறைந்தபட்சம் 10 நாட்கள் காத்திருக்கவேண்டியிருக்கும். அப்படியே தொற்றுக்காளான கனேடியர்கள் கனடா நில எல்லையைத் தாண்டினாலும், அவர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். ஆனால், விதிகளை மீறியதற்காக அவர்களுக்கு 5,000 கனேடிய டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்கள், பயணத்துக்கு முந்தைய கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டியதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் கனடாவுக்குள் நுழைவதற்கு 10 முதல் 180 நாட்களுக்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் மூலம், தாங்கள் சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டதை நிரூபிக்கலாம்.
மற்ற விதிகள்
மேலும், இன்று முதல், முழுமையாக தடுப்பூசி பெற்ற தங்கள் பெற்றோருடன் கனடாவுக்கு வரும் 12 வயதுக்குட்பட்ட தடுப்பூசி பெறாத பிள்ளைகள், பள்ளிகளையோ, பகல் நேரக் காப்பகங்களையோ 14 நாட்களுக்கு தவிர்க்கவேண்டும் என்ற விதியும் நீக்கப்படுகிறது.
கனடாவுக்குள் நுழையும்போது கொரோனா பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்படும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள், தங்கள் பரிசோதனை முடிவுகள் வரும்வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை.
கடைசியாக, அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்துக்கு எதிரான ஆலோசனையையும் கனடா விலக்கிக்கொண்டுள்ளது.