காசா, எகிப்து எல்லை வழியாக, எகிப்து நாட்டுக்குள் வெளிநாட்டவர்களும் காயமடைந்த பாலஸ்தீனர்களும் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், நூற்றுக்கணக்கான கனேடியர்கள் காசாவில் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.
வியாழனன்று, காசாவிலிருந்து எகிப்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட, வெளிநாட்டவர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பட்டியலில் இலங்கையர்கள், ஐரோப்பியர்கள், மெக்சிகோ நாட்டவர்கள், தென்கொரியா நாட்டவர்கள் மற்றும் 400 அமெரிக்கர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஆனால், அந்தப் பட்டியலில் ஒரு கனேடியர் கூட இல்லை!
புதன்கிழமை, முதன்முறையாக 335 வெளிநாட்டவர்களும், படுகாயமடைந்த 76 பாலஸ்தீனர்களும் காசாவிலிருந்து எகிப்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது, ஒரே ஒரு கனேடியர் காசாவிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால், கனடா அளித்துள்ள, காசாவிலிருந்து வெளியேற விரும்பும் கனேடியர்கள் பட்டியலில் 450 கனேடியர்கள் உள்ளார்கள்.
கனடா காசாவில் சிக்கியுள்ள தன் குடிமக்களை பாதுகாப்பாக காசாவிலிருந்து வெளியேற்றுவதில் தோல்வியடைந்துள்ளதால், அவர்கள் கடுமையான விரக்தியிலும் வருத்தத்திலும் இருப்பதாக, அவர்களுடைய சார்பில், செய்தித்தொடர்பாளரான Reem Sultan என்னும் பெண் தெரிவித்துள்ளார்.
காசாவிலிருக்கும் கனேடியர்களை தொடர்பு கொண்டு வருவதாக கனேடிய அதிகாரிகள் கூறிவரும் நிலையில், உண்மையில், அதற்கு மாறாக, தனக்குத் தெரிந்த கனேடியர்கள் சிலர், இதுவரை கனடா அதிகாரிகள் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியுள்ளதாக தெரிவிக்கிறார் Reem Sultan.
காசாவில் மக்கள் இறந்துகொண்டே இருக்கிறார்கள், எந்த நேரத்திலும் எங்கள் குடும்பங்களுக்கும் ஆபத்து வரலாம் என்று கூறும் அவர், இஸ்ரேலிலிருந்து 1,600க்கும் அதிகமான கனேடியர்களை 19 விமானங்கள் மூலம் கனடா வெளியேற்றிய நிலையில், காசாவிலிருப்பவர்களை வெளியேற்ற கனடா அரசு அந்த அளவுக்கு முயற்சி எடுக்கவில்லை என்றும், அப்படியானால், தாங்கள் கனடாவுக்கு முக்கியம் இல்லையோ என கனேடிய குடும்பங்கள் எண்ணி, வருத்தமும் விரக்தியும் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
அக்டோபர் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் ஆறு கனேடியர்கள் கொல்லப்பட்டார்கள், இரண்டு கனேடியர்களைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.