சுற்றுலாவுக்காக கனடா சென்று தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது.
அதாவது, சுற்றுலாப்பயணிகளாக கனடாவுக்கு வந்து தற்போது கனடாவில் இருக்கும் வெளிநாட்டவர்கள், தங்களுக்கு முறையான வேலைவாய்ப்பு ஆஃபர் கிடைக்கும் நிலையில், அவர்கள் தொடர்ந்து பணி அனுமதிக்கு விண்ணப்பித்து, பணி அனுமதி பெற்று கனடாவில் பணி செய்யலாம், அவர்கள் கனடாவிலிருந்து வெளியேறவேண்டியதில்லை என கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
கோவிட் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த தற்காலிக கொள்கை நேற்றுடன் காலாவதியாகும் நிலையில், தற்போது அது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 28ஆம் திகதிவரை இத்திட்டம் அமுலில் இருக்கும்.
இந்தக் கொள்கை மாற்றத்துக்கு முன், கனடாவில் பணி செய்ய விண்ணப்பிப்பவர்கள் தங்கள் முதல் பணி அனுமதிக்காக, தாங்கள் கனடா வருவதற்கு முன்பே விண்ணப்பிக்கவேண்டிய நிலை இருந்தது.
அதேநேரத்தில், அவர்கள் சுற்றுலாப்பயணியாக ஏற்கனவே கனடாவுக்கு வந்து கனடாவிலேயே இருப்பார்களேயானால், அவர்களுக்குப் பணி அனுமதி வழங்கப்படவேண்டுமானால், அவர்கள் கனடாவை விட்டு வெளியேறவேண்டியிருக்கும்.
ஆனால், தற்போது இந்த கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் கனடாவை விட்டு வெளியேறவேண்டிய அவசியம் இல்லை.
இந்த தற்காலிக கொள்கை மாற்றத்தைப் பயன்படுத்திக்கொள்ளவிரும்புவோர், பணிக்கு விண்ணப்பிக்கும் நாளில் அவர்களிடம் செல்லத்தக்க சுற்றுலாப்பயணி என்ற நிலையும் (valid status in Canada as a visitor), முறையான வேலைக்கான ஆஃபரும் இருக்கவேண்டும் என்பதுபோன்ற சில நிபந்தனைகளும் உள்ளதை நினைவில் கொள்வது நல்லது.