கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்தோர் வராவிட்டால், கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிப்பது சாத்தியமேயில்லை என்று கூறியுள்ளார் கனடாவின் புதிய புலம்பெயர்தல் அமைச்சர்.
கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை புதிய புலம்பெயர்ந்தோரால் அதிகரிப்பதாக சமீபத்தில் கனடா வங்கி தெரிவித்திருந்தது.
இது குறித்து கனடாவின் புதிய புலம்பெயர்தல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Marc Millerஇடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், அதனால் கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டார்கள்.
அந்தக் கேள்விக்கு இல்லை என பதிலளித்த அமைச்சர் Marc Miller, வெளிநாட்டிலிருந்து கனடாவுக்கு வரும் திறன்மிகுப் பணியாளர்கள் இல்லையென்றால், இப்போது கனடாவில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வீடுகளைக் கட்டுவது சாத்தியமே இல்லை என்றார்.
புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து மக்கள் கேட்கிறார்கள் என்றால் என்ன பொருள், நமக்கு வீடுகளைக் கட்டுவதற்காக தேவைப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் குறைப்பதா அல்லது குடும்பங்கள் இணைவதைத் தடுப்பதா, அப்படியென்றால் அது அவர்களுடைய மன நலனையும், ஏற்கனவே இங்கு வந்துவிட்ட புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களின் நலனை பாதிப்பதா என்று பதில் கேள்வி எழுப்பினார் அமைச்சர்.