Reading Time: < 1 minute

கனேடிய நிர்வாகம் ஆபத்தை உணராமல் ஆத்திரமூட்டுவதை தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் கனடாவை எச்சரித்துள்ளது.

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை முறியடிப்பதை கண்காணிக்கும் ரோந்து விமானங்களை சீன போர் விமானங்கள் எதிர்கொள்வதாக கனடாவின் இராணுவம் கடந்த வாரம் குற்றம் சாட்டியது.

இந்த நிலையிலேயே சீன வெளிவிவகார அமைச்சகம் கனடாவை எச்சரித்துள்ளது.

மேலும், பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்தியதன் பெயரில் மற்ற நாடுகளின் கடல் மற்றும் வான்வெளியில் ராணுவக் கண்காணிப்பை மேற்கொள்ள எந்த நாட்டையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனுமதிக்கவில்லை எனவும் சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார்.

முன்னதாக, வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகள் முறையாக அமுலாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக வட பசிபிக் பகுதியில் ஒரு முக்கியமான பணியின் தீவிர உறுப்பினராக கனடா இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.