இந்தியப் பெண் ஒருவரின் மகனை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி லட்சங்களைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர் சிலர்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பபிதா. Balla என்னும் கிராமத்தில் வாழ்ந்துவரும் பபிதா, ஓராண்டுக்கு முன் கிருஷ்ண ஷர்மா, முனி ராம் என்னும் இருவரை சந்தித்துள்ளார். பபிதாவின் மகனான சன்னியை கனடாவுக்கு அனுப்புவதாக அவர்கள் பபிதாவிடம் கூறியுள்ளனர்.
அவர்கள் இருவரும், பபிதாவின் மகனை கனடா அனுப்புவதற்காக, ரவி என்னும் ஏஜண்டை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். அந்த ஏஜண்ட் பபிதாவிடம் 18 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். ஆவணங்களை நிரப்பியபின், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி, விசா வந்துள்ளதாகவும், 10 நாட்களில் பணத்தை ஏற்பாடு செய்யுமாறும் பபிதாவிடம் கூறியுள்ளார் ரவி.
அதன்படி பபிதா ரவியிடம் 17.63 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். 2024, பிப்ரவரி 10ஆம் திகதிக்கு விமான டிக்கெட் தயாரானதாக ரவி கூற, அந்த டிக்கெட் மற்றும் விசாவுடன் சன்னி கனடா செல்லத் தயாராக, விமான நிலைய அதிகாரிகள், அந்த விசாவும் டிக்கெட்டும் போலியானவை என்று கூறியுள்ளார்கள்.
வீடு திரும்பிய சன்னி, ரவியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயல, ரவியின் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது. அவரது அலுவலகத்துக்குச் சென்றால், அலுவலகத்தை மாற்றிவிட்டு எங்கோ சென்றுவிட்டார் ரவி.
வட்டிக்கு வாங்கிய பணமும் பறிபோக, மகனும் கனடாவுக்கும் செல்ல முடியாததால், ஏமாற்றமடைந்த பபிதா பொலிசாரிடம் இந்த மோசடி குறித்து புகார் செய்துள்ளார். பொலிசார் வழக்குப் பதிவு செய்து, மோசடியாளர்களைத் தேடிவருகிறார்கள்.