ஒமிக்ரோன் புதிய திரிபு பரவலைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா தவிர்ந்த அனைத்து நாடுகளிலும் இருந்தும் விமானம் மூலம் வரும் அனைவருக்கும் கொவிட் பரிசோதனை அவசியம் என கனடா அறிவித்துள்ளது.
கனடாவில் இதுவரை 07 பேர் ஒமிக்ரோன் புதிய திரிபு வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் தெரிவித்தார்.
ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள 7 பேரில் 4 பேர் நைஜீரியாவுக்கான பயண வரலாற்றை கொண்டவர்கள் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, விமானம் மூலம் கனடா வரும் அமெரிக்கர்கள் தவிர்ந்த ஏனைய நாட்டவர்கள் கொவிட் பரிசோதனை செய்துகொண்டு அதன் முடிவுகள் வரும் வரை தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 14 நாட்களுக்குள் நைஜீரியா, மலாவி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினர் கனடாவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்படுவதாக கனடா போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்கா, நமீபியா, லெசோதோ, போட்ஸ்வானா, எஸ்வதினி, ஜிம்பாப்வே மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் மற்றும் கடந்த 14 நாட்களில் அங்கு பயணம் செய்தவர்கள் நாட்டுக்குள் நுழைய கனடா மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்தது.
10 நாடுகளில் இருந்து வரும் கனேடியர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட கனடாவிற்குள் நுழைவதற்கு முன்பு கொவிட் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் தெரிவித்துள்ளார்.