கனடாவுக்குப் புலம்பெயரும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? வேண்டாம். இங்கு விலைவாசி நினைத்துப்பார்க்கமுடியாதபடி பயங்கரமாக இருக்கிறது என எச்சரித்துள்ளார் கனேடியர் ஒருவர்.
சாலடின் விலை 41 டொலர்கள்
கனடாவில் மளிகைப்பொருட்கள் விலை முதல் வீட்டு வாடகை வரை மிகவும் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.
சமீபத்தில் ரொரன்றோவிலுள்ள Sobeys பல்பொருள் அங்காடியில் சாலட் ஒன்றை வாங்கிய Rob Gill என்பவர் அதன் விலை 41.99 டொலர்கள் என தெரியவந்ததால் கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், கனடாவுக்குப் புலம்பெயரும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? வேண்டாம். இங்கு நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ள பூஞ்சை நிறைந்த சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாதம் ஒன்றிற்கு 1,600 டொலர்கள் வாடகை கொடுக்கவேண்டியிருக்கும்.
வெறும் ஒரு Caesar சாலடுக்கு 42 டொலர்கள் கொடுக்கவேண்டியிருக்கும். மணிக்கு 15 டொலர்கள் ஊதியம் கிடைக்கும். ஆனால், எல்லாவற்றிற்கும் வரி செலுத்தவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரைப்போலவே பலரும் விலைவாசி உயர்வு தொடர்பான தங்கள் கோபத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திவருகிறார்கள்.
கோபத்தை வெளிப்படுத்தியுள்ள கட்சித்தலைவர்
பொதுமக்களைப்போலவே, New Democratic Party (NDP) கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங்கும் விலைவாசி உயர்வு குறித்து தனது கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், உங்கள் விலைகள் தொடர்ந்து ராக்கெட் போல ஏறிக்கொண்டே செல்கின்றன. Sobeys பல்பொருள் அங்காடியில் ஒரு caesar சாலடுக்கு 42 டொலர்கள், Loblawsஇல் சிக்கனுக்கு 37 டொலர்கள்.
பேராசை பிடித்த மளிகைக்கடை செல்வந்தர்கள் கொள்ளையடிப்பதற்காக பணவீக்கத்தைப் பயன்படுத்திக்கோள்வதால்தானே இந்த நிலை?
லிபரல் கட்சியினரும் கன்சர்வேட்டிவ் கட்சியினரும் அப்படிச் செய்ய அவர்களை அனுமதிக்கிறீர்கள். இது தவறு, அநீதி என்று கூறிப்பிட்டுள்ளார்.
ஒருபக்கம் இப்படி பொதுமக்களும், அரசியல்வாதிகளும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்க, மறுபக்கம் விலைவாசி இன்னமும் உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது.