Reading Time: < 1 minute

கனடாவில் நேற்று வரை மொத்தம் 77 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கியூபெக் மாகாணத்தில் மட்டும் 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒன்ராறியோவில் 5 பேரும் அல்பர்ட்டாவில் ஒருவருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தெரசா டாம் கூறினார்.

கடந்த மாத இறுதியில் நாடு முழுவதும் ஐந்து குரங்கம்மை தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஒரே வாரத்திற்குள் இந்த எண்ணிக்கை 15 மடங்கால் அதிகரித்துள்ளது.

விகிதாசார அடிப்படையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகளவில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் செய்தியாளர்களிடம் கூறினார்.

எனினும் பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலைகளுக்கு அப்பால் எந்த வகையினரும் இவ்வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படலாம்.நெருங்கிய தொடர்பு, உடலுறவு, பாதிக்கப்பட்டவர்களின் கழிவுகள் மூலமாகவும் குரங்கம்மை பரவலாம் எனவும் தெரசா டாம் குறிப்பிட்டார்.