Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று 250,000 டொலர் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ரொறன்ரோவை மையமாகக் கொண்ட Vleepo என்ற நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மொத்திவ் ஸ்டாய்கோஸ் என்பவரின் மரணம் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு இந்த சன்மானத் தொகை வழங்கப்பட உள்ளது.

ஸ்டாய்கோஸ் கொல்லப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த சன்மான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

ஸ்டாய்கோஸின் மரணம் பெரும் வேதனையை அளிப்பதாகவும் தொடர்ந்தும் குடும்பத்தினர் துயரத்தில் வாடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு யோர்க்வில் அவன்யூவில் ஸ்டாய்கோஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். 37 வயதான ஸ்டாய்கோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் பொலிஸார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொலை பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு 250,000 டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.