கனடாவில், மளிகைப்பொருட்களின் விலை 2023இல் 7 சதவிகிதம் வரை உயரலாம் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடும்பம் ஒன்றிற்கு 1,065 டொலர்கள் வரை உயரலாம்
கனடாவில் மளிகைப்பொருட்களின் விலை 1,065 டொலர்கள் உயர்ந்து, குடும்பம் ஒன்று, ஆண்டொன்றிற்கு மளிகைப்பொருட்களுக்காக மட்டும் 16,288 டொலர்கள் செலவு செய்ய நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் வாழும், தனது 40 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவர், அடுத்த ஆண்டு தனது மளிகை செலவுக்காக 3,740 டொலர்களும், அதே வயதிலிருக்கும் ஆண் ஒருவர் 4,168 டொலர்களும் செலவிடவேண்டியிருக்கும் என கனடாவின் உணவுப்பொருட்கள் விலை அறிக்கையும் கனடா புள்ளியியல் துறையும் தெரிவிக்கின்றன.
விலை உயர்வுக்கு என்ன காரணம்?
இந்த மளிகைப்பொருட்கள் விலை உயர்வின் பின்னணியில் பல காரணிகள் உள்ளன.
மளிகைப்பொருட்கள் விலை உயர்வுக்கு, பருவநிலை மாற்றம், உக்ரைன் போர் போன்ற விடயங்கள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் கொரோனாவின் தாக்கம் ஆகியவை காரணம் என்கிறது கனடாவின் உணவுப்பொருட்கள் விலை அறிக்கை.
டொலருக்கு எதிரான கரன்சியின் மதிப்பு நிலையாக இல்லாமல் அவ்வப்போது மாறி வருவதும் கூட உணவுப்பொருட்கள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கனடா டொலரின் மதிப்பு குறையும்போது, வெளிநாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூடுதல் செலவிட வேண்டியிருக்கும்.
என்னென்ன பொருட்கள் விலை அதிகரிக்கலாம்?
குறிப்பாகக் கூறவேண்டுமானால், காய்கறிகள் விலை எட்டு சதவிகிதமும்,
இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் வெதுப்பக (bakery) தயாரீப்புகளின் விலை ஏழு சதவிகிதமும்,
கடல் உணவுகளின் விலை, ஆறு சதவிகிதமும்,
பழங்கள் விலை ஐந்து சதவிகிதமும்,
பல்பொருள் அங்காடிகளை ஒப்பிடும்போது, உணவகங்களுக்கு ஆகும் செலவு ஆறு சதவிகிதம் வரையும் அதிகரிக்கலாம் என கனடாவின் உணவுப்பொருட்கள் விலை அறிக்கை கூறுகிறது.