கனடாவில் வாசகா கடற்கரை (Wasaga Beach) பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அதிரடியாக புகுந்த கும்பல் ஒன்று பெண் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். இரவு சுமார் 8.30 மணியளவில் (Jan 12th, 2022) டிரெயில்வுட் பகுதியில் இருந்து உதவி கோரி அழைக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசாரிடம், மூவர் கும்பல் ஒன்று வீடு புகுந்து 37 வயதுடைய பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் பெயர் Elnaz Hajtamiri எனவும், அந்த மூவர் கும்பல் வெள்ளை நிற SUVல் மாயமானதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அந்த மூவர் கும்பலிடம் ஆயுதம் இருக்கலாம் எனவும் அவர்கள் ஆபத்தனவர்களாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் Hajtamiri பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பொலிசார் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.