Reading Time: < 1 minute

பெரும்பாலான நாடுகளைப்போலவே கனடாவுக்கும் அதன் பொருளாதார வளர்ச்சிக்காக புலம்பெயர்ந்தோர் தேவை என்பது மறுக்கமுடியாத உண்மை.

பல நாடுகள், இன்று புலம்பெயர்ந்தோரின் சேவைகளுக்காக காத்திருக்கின்றன. பண்ணைகளில் பழம் பறிக்கும் பணி செய்வோரிலிருந்து, திறன்மிகுப் பணியாளர் வரை, பலதரப்பட்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் பல நாடுகளின் பொருளாதரத்தை உயர்த்த தேவைப்படுகிறார்கள்.

ஆனால், புலம்பெயர்ந்தோரால் தங்களுக்கு இழப்பு என்பதுபோன்ற ஒரு தோற்றத்தையே பல நாடுகள் கொடுத்துவருகின்றன.

கனடாவைப் பொருத்தவரை, கனடாவில் வீடுகள் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரே காரணம் என்பதுபோன்ற ஒரு மாயையான தோற்றம் காட்டப்படுகிறது. ஆனால், உண்மை நிலை என்ன?

கனடாவில் வேலை செய்யும் வயதிலிருப்போரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இவ்வளவு காலம் வேலை செய்த ஒரு பெரிய கூட்டம், இப்போது ஓய்வு பெறப்போகிறது.

ஆகவே, அந்த எண்ணிக்கையை ஈடு செய்ய கனடாவுக்கு வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை.

ஆக, புலம்பெயர்ந்தோர் வந்தால் மட்டுமே கனடாவின் பொருளாதாரத்தை பராமரிக்க இயலும் என்பது உண்மை என்பதை பொருளாதாரவியல் நிபுணர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால், மறுபக்கமோ, கனடாவில் நிலவும் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்ந்தோரே காரணம் என ஒரு குற்றச்சாட்டு பெரிதாக முன்வைக்கப்படுகிறது!

2025வாக்கில், சுமார் 500,000 புதிய புலம்பெயர்வோரை கனடாவுக்கு வரவழைக்க கனடா பெடரல் அரசு திட்டமிட்டுள்ளது. அத்தனை பேர் கனடாவுக்கு வேலை செய்யவந்தால் அவர்களுக்கு தங்க இடம் வேண்டும்தானே?

அப்படி இடம் கொடுக்கமுடியாவிட்டால் எதற்காக அத்தனை பேரை வரவழைக்கவேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

வீடு வழங்க இயலாத அரசு மற்றும் சமுதாயத்தின் இயலாமையை மறைக்க, புலம்பெயர்ந்தோர் பலியாடாக ஆக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் புலம்பெயர்தல் ஆதரவு சமூக ஆர்வலர்களும், வீடுகள் துறை நிபுணர்களும்.

அதாவது, வீடுகள் கிடைக்காததால் அதிகம் பாதிப்புக்குள்ளாவோர் இந்த புலம்பெயர்வோர்தான். ஆனால், வீடுகள் பற்றாக்குறைக்கு அவர்கள்தான் காரணம் என அவர்கள் மீதே பழி போடப்படுகிறது.

ஆக, கனடா இருகரம் நீட்டி வரவேற்கிறது என எண்ணி வரும் புலம்பெயர்ந்தோரின் கனவுகள் இங்கு வந்து வீடுகள் கிடைக்காமல் படும் பிரச்சினைகளால் கலைந்துபோகின்றன எனலாம்.