தன் வீட்டில் வாடகைக்கு இருந்த இளம் ஜோடியை சுட்டுக்கொன்ற வீட்டின் உரிமையாளர் பொலிசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.
ஒன்ராறியோவிலுள்ள ஹாமில்ட்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்துவந்துள்ளது, Carissa MacDonald (27), Aaron Stone (28) என்னும் இளம் ஜோடி. கேரிஸா உள்ளூர் கத்தோலிக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவர, ஆரோன், எலக்ட்ரிஷியனாக பணியாற்றிவந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை, 5.40 மணியளவில், துப்பாக்கிச்சூடு ஒன்று குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்ததின்பேரில், அந்த இளம் ஜோடி வசித்துவந்த வீட்டுக்கு அவர்கள் விரைந்துள்ளார்கள்.
அப்போது, கேரிஸா மற்றும் ஆரோன் ஆகிய இருவரும் சடலங்களாக கிடப்பதை பொலிசார் கண்டுள்ளார்கள்.
தாங்கள் வாடகைக்கு வசிக்கும் வீட்டில் பூஞ்சை பிடித்திருப்பதாக அவர்கள் வீட்டின் உரிமையாளரிடம் புகாரளித்துள்ளார்கள். மூவருக்குமிடையே வாக்குவாதம் முற்ற, 57 வயதான அந்த வீட்டு உரிமையாளர் கேரிஸா மற்றும் ஆரோன் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
தகவலறிந்து பொலிசார் அந்த வீட்டுக்கு வர, கையில் துப்பாக்கியுடன், வீட்டுக்குள் மறைந்துகொண்டுள்ளார் அந்த வீட்டு உரிமையாளர்.
அவருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த நீண்ட நேரம் முயற்சி மேற்கொண்டும் பலன் கிடக்காத நிலையில், திடீரென பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார் அந்த நபர். பதிலுக்கு பொலிசார் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
வாடகைக்கு குடியிருந்த அந்த ஜோடி, வீட்டில் பூஞ்சை பிரச்சினை இருப்பதை புகாரளித்தற்காக வீட்டு உரிமையாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேல் துக்கமான விடயம் என்னவென்றால், கேரிஸாவுக்கும் ஆரோனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, அவர்கள் தங்கள் திருமணத்துக்காக காத்திருந்த நிலையில், அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதுதான்!