Reading Time: 2 minutes

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வாகனம் ஒன்றால் மோதி கொல்ப்பட்ட நிலையில் இது முன்னரே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒன்றாரியோ மாகாணம் ரொரண்டோவுக்கு தென்மேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள லண்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான நதானியேல் வெல்ட்மேன் என்ற கனேடிய இளைஞன் நேற்றுக் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவா் வியாழக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

2017-ஆம் ஆண்டு க்யூபெக் மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு கனடாவில் நடந்திருக்கும் இன ரீதியான மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்கள் தாக்கப்பட்டதாக லண்டன் பொலிஸ் துப்பறியும் கண்காணிப்பாளர் போல் வெயிட் தெரிவித்துள்ளார்.

20 வயதான நதானியேல் வெல்ட்மேன் ஞாயிற்றுக்கிழமை தனது வாகனத்தினால் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களையும் மோதினார். பின்னர் அதிவேகமாக அவர் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் சாட்சிகளை மேற்கோள் காட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இது முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. இன வெறுப்பால் இப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன என போல் வெயிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் அவா்களின் இஸ்லாமிய நம்பிக்கையின் காரணமாக குறிவைக்கப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம் என்று வெயிட் தெரிவித்தார்.

ரொரண்டோவுக்கு தென்மேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள லண்டன் பொலிஸார், ஆர்.சி.எம்.பி. பொலிஸ் மற்றும் வழக்குரைஞர்கள் இணைந்து கொலைச் சந்தேக நபரக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

கொலைச் சந்தேக நபர் முன்னர் குற்றங்களில் ஈடுபட்டதற்கான பதிவு இல்லை. இன வெறுப்புக் குழுவில் உறுப்பினராக இருப்பது தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட குடும்பம் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து குடியேறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2017 ஆம் ஆண்டில் கியூபெக் நகர மசூதியின் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இடம்பெற்ற கனேடிய முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான தாக்குதல் இதுவாகும் என லண்டன் மேயர் எட் ஹோல்டர் தெரிவித்துள்ளார். லண்டன் நகரம் இதுவரை கண்டிராத மிக மோசமான படுகொலை இது எனவும் அவர் கூறினார்.

இது முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை இல்லை. முழு லண்டன் நகர மக்களுக்கு எதிரான சம்பவமாகவே கருதப்படும் எனவும் அவா் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தச் செய்தியைக் கேள்வியுற்று தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக வெறுப்புணர்வுகளுக்கு கனடாவில் இடமில்லை எனவும் அவா் கூறியுள்ளார்.

இதேவேளை, வெறுப்பின் உச்சமான கொடூர செயல் என இதனை வர்ணித்துள்ள ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட், விரைவில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.