Reading Time: < 1 minute

கனடாவில் பெரும்பாலான பகுதிகளில் றோஜர்ஸ் (Rogers) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தந்தியில்லா அலைபேசி மற்றும் இணைய சேவைகள் நேற்று திங்கட்கிழமை செயலிழந்த நிலையில் இந்த சேவைகள் பெரும்பாலும் நேற்று மாலை வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று பல மணிநேரங்கள் நீடித்த சிக்கலுக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. எங்கள் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இப்போது சேவைகளை மீண்டும் பெறக்கூடியதாக உள்ளது என தொலைத் தொடர்பு நிறுவனமான றோஜர்ஸ் தெரிவித்துள்ளது. சிறிய எண்ணிக்கையான வாடிக்கையாளர்கள் தொடந்தும் சேவையைப் பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும் கூடிய விரைவில் சேவைகள் முழுமையாகச் சீரடையும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது. கனடாவில் பெரும்பாலான பகுதிகளில் றோஜர்ஸ் (Rogers) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தந்தியில்லா அலைபேசி மற்றும் இணைய சேவைகள் நேற்று திங்கட்கிழமை செயலிழந்ததால் பெரும்பாலான கனேடியர்கள் கைப்பேசி அழைப்புக்களை எடுக்கவும் இணையதளங்களை அணுகவும் முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தச் சேவைகள் செயலிழந்துள்ளதாக பெரும்பாலான முறைப்பாடுகள் ஒன்ராறியோவில் இருந்து வெளியாகியுள்ளன. எனினும் பிரிட்டிஷ் கொலம்பியா முதல் பிரின்ஸ் எட்வர்ட் தீவு வரையிலான மாகாணங்களிலும் ரோஜர்ஸ் அலைபேசி மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன.

தங்கள் சேவையில் ஏற்பட்டுள்ள இடையூறுக்கு றோஜர்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியது. ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை சீர் செய்யும் பணியில் தங்கள் குழுவினர் துரித கதியில் செயற்பட்டு வருவதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்தது.

இணைய சேவை செயலிழப்பால் ஒன்ராறியோ மக்கள் 911 அவசர சேவை தொடர்புகளை ஏற்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. அத்துடன், கனேடியர்களின் கோவிட்19 தடுப்பூசி முன்பதிவு நடவடிக்கைகளும் இந்த சேவை செயலிழப்பால் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் கனடாவில் பெரும்பாலான பகுதிகளில் றோஜர்ஸ் (Rogers) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவைகள் பெரும்பாலும் நேற்று மாலை வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.