Reading Time: < 1 minute

கனடாவின் ஆண்டாரியோவில் வசித்து வரும் சீக்கிய பெண் டினா சிங், தனது மகன்களுக்காக டர்பன் – ஃப்ரன்ட்லி ஹெல்மட்டை வடிவமைத்து புதுமைப்படைத்துள்ளார்.

டர்பன் அணிந்து கொண்டு, ஹெல்மட் அணிவது என்பது மிகவும் சிரமமான வேலை. ஆனால், தனது பிள்ளைகள் ஹெல்மட் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர் இந்த புதிய கண்டுபிடிப்பை செய்துள்ளார்.

முதலில், டர்பன் அணிந்தபடியே ஹெல்மட் அணிவது போன்ற ஒன்றை அவர் சந்தை எங்கும் தேடியுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை என்பதால் மாற்றி யோசித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை வாங்கி அதனை சற்று மாற்றி வடிவமைத்துப் பார்த்து வந்தார். மூளைக் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை மேற்கொண்டு வரும் டினா சிங்குக்கு, தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியம் என்பது நன்கு தெரிந்திருந்தது.

இந்நிலையில் தனது மகன்களின் தலை அளவை விட மிகப்பெரிய தலைக்கவசங்களை அணிவதால், தலைக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த அவர் புதிய தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளார்.

இந்த தலைக்கவசத்தின் மேல் பகுதி கூம்பு வடிவில் இருக்கும். இதனால் டர்பனுக்கு போதிய வசதி இருக்கும். கண் புருவத்துக்கு மேலே இரண்டு விரல் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்பதுடன் காதுக்கு அருகே வி வடிவமும் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்பைத் தொடர்ந்து இந்த வகை தலைக்கவசங்களை தயாரிக்க தற்போது அனுமதியும் கிடைத்துள்ளது. மிக நீண்ட காலமாக சீக்கிய மக்களுக்கு இருந்த மிகப்பெரிய தடை இவரது கண்டுபிடிப்பால் உடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த கண்டுபிடிப்பால் டர்பனை அணிந்து கொண்டு எந்த வகை ஹெல்மெட்டையும் அணிய முடியாமல் இருந்த நிலை இனி மாறும் என்றும் கூறப்படுகிறது.