பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
எனவே, கனேடியர்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறும அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பயணங்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் அவற்றை இரத்துச் செய்யுமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.
பிரிட்டன் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் வேகமாகப் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து எங்கள் வல்லுனர்கள் தீவிரமாக அவதானித்து வருகின்றனர். இந்நிலையில் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு இல்லாமல் புதிய கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அரசாங்கம் ஆலோசனை கூறுகிறது. ஆனால் தடை அறிவிக்கப்படவில்லை. இது குறித்த முடிவு கனேடியர்களிம் விடப்படுகிறது எனவும் ட்ரூடோ கூறினார்.
கனேடிய விமான நிறுவனங்கள் மற்றும் பயண நிறுவனங்கள் விடுமுறை சுற்றுலாப் பயணங்களை தொடர்ந்து ஏற்பாடு செய்கின்றன. கனடாவிலிருந்து தினமும் விமானங்கள் பிற நாடுகளுக்குப் புறப்படுகின்றன.
மக்களுக்கு பயணிக்க உரிமை உண்டு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதேநேரம் ஏனையவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் உரிமையும் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதையும் நினைவுபடுத்துகிறேன் எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.
2020 மார்ச் நடுப்பகுதியில் இருந்து சர்வதேச பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு கனடா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கடந்த டிசம்பரில் சில கனேடியர்கள் வெளிநாடுகளுக்கு விடுமுறைச் சுற்றுலா செல்ல முயன்றவேளை மத்திய அரசு புதிய பயண கட்டுப்பாடுகளை விதித்தது.
நாட்டுக்குள் வருவோர் விமானப் பயணத்தக்கு முன்பு தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனப் பெறப்பட்ட மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
அதேபோல், சிறிது காலம் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் மீண்டும் பிரிட்டன் விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கனடாவில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 75,000 டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.