Reading Time: < 1 minute

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 17 வயதான சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.

பாடசாலைக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காப்ரோவின் டேன்போர்த் மற்றும் பிரிச்மவுன்ட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள பிரிச்மவுன்ட் பார்க் உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தி தாக்குதல் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன் போது 17 வயதான சிறுவன் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் உயிர் காப்பு முதலுதவிகளை செய்ததாவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரிச்மவுன்ட் பார்க் உயர்நிலைப் பாடசாலையின் தரம் 12 மாணவனே படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய எந்தவொரு விபரங்களையும் பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.

கத்தி குத்து சம்பவத்தை தொடர்ந்து பாடசாலை மூடப்பட்டதாகவும் பின்னர், மாணவர்கள் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.