Reading Time: < 1 minute

மிக ஆபத்தான ஒருவகை பறவை காய்ச்சல், வட அமெரிக்கா தொடங்கி தற்போது கனடா முழுவதும் பரவி வருவதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மில்லியன் கணக்கான கோழி, வாத்து முதலியன கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா, நோவா ஸ்கோடியா, நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் ஆகிய பகுதிகளில் H5N1 வகை பறவை காய்ச்சல் அடையாளம் காணப்பட்டது.

இதனால் பல எண்ணிக்கையிலான பண்ணைகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. அமெரிக்காவில் 24 மாகாணங்களில் மொத்தம் 23 மில்லியன் கோழிகள் மற்றும் வான்கோழிகள் கொல்லப்பட்டன.

ஆனால் தற்போது பரவும் பறவை காய்ச்சல் எங்கிருந்து தொடங்கியது என்பது தொடர்பில் தகவல் ஏதும் இல்லை. வனப்பகுதியில் வாழும் பறவைகளால் பெரும்பாலும் இந்த H5N1 வகை தொற்று பரவுவதாகவே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், இதனால் மனிதர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் கனடா முழுவதிலும் இருந்து கோழி மாமிசம் உட்பட உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அதே நேரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதிக பரவல் கண்டறியப்பட்ட குறிப்பிட்ட பிராந்தியங்களிலிருந்து தயாரிப்புகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.