சுமார் 3 மணி நேரம் தொடர்ந்த இந்த போராட்டத்தின் பலனாக, அதிசயிக்கத்தக்க வகையில் குழந்தையின் இதயத்துடிப்பு மீண்டுள்ளது.
கனடாவில் உள்ள பெட்ரோலியா நகரத்தில், குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 20 மாத குழந்தை, அங்கிருந்த நீச்சல் குளத்திற்குள் தவறி விழுந்துள்ளது.
இதனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கவனிக்காத நிலையில், சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகே குழந்தை நீச்சல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்ததைக் கண்டு பாதுகாப்பு மைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து குழந்தைக்கு முதலுதவி செய்துள்ளனர். இருப்பினும் எந்த பலனும் கிடைக்காததால், அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை சோதித்த மருத்துவர்கள், இதயத்துடிப்பு நின்று போயிருப்பதைக் கண்டு உடனடியாக சுவாசம் மற்றும் இதயத்துடிப்பை மீண்டும் கொண்டு வரக்கூடிய சி.பி.ஆர். சிகிச்சையை செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தையின் உடலை கதகதப்பாக வைத்திருக்கவும், மிதமான அழுத்தம் கொடுத்து சி.பி.ஆர். சிகிச்சையை செய்யவும் மருத்துவர்களும், செவிலியர்களும் போராடிய நிலையில், மருத்துவமனையே பரபரப்பாகியுள்ளது.
சுமார் 3 மணி நேரம் தொடர்ந்த இந்த போராட்டத்தின் பலனாக, அதிசயிக்கத்தக்க வகையில் குழந்தையின் இதயத்துடிப்பு மீண்டுள்ளது. இந்த உணர்ச்சிமிகு நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தையின் உயிரை மீட்ட மருத்துவ பணியாளர்களுக்கு, அந்த குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். அதே சமயம் அஜாக்கிரதையாக செயல்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பணியில் இருந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.