கனடாவில் தொலைபேசி வழியாக மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பிரஜைகளை ஏமாற்றி அவர்களின் பணத்தை அபகரிக்கும் பல்வேறு சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வான்கூவாரைச் சேர்ந்த 76 வயதான ஓய்வு பெற்ற தாதியொருவர் தனது ஒட்டுமொத்த சேமிப்பு பணத்தையும் மோசடிகாரர் ஒருவரிடம் வழங்கியுள்ளார்.
மூதாட்டியின் நெருங்கிய உறவினர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை விடுதலை செய்ய பணம் தேவை எனவும் கூறி இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
பிணையில் விடுதலை செய்வதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி பல சந்தர்ப்பங்களில் பெண்ணிடமிருந்து பணம் களவாடப்பட்டுள்ளது.
மிகவும் உருக்கமான முறையில் பேசி, தன்னை ஏமாற்றி இவ்வாறு பணம் அபகரித்துள்ளதாக அந்த மூதாட்டி குறிப்பிடுகின்றார்.
தன்னிடம் பணம் இல்லை எனக் கூறும் வரையில் தொடர்ச்சியாக குறித்த நபர் தொலைபேசி அழைப்புக்களை எடுத்து பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.
பணம் இல்லை எனக் கூறியதன் பின்னர் தொலைபேசி அழைப்பு வருவதில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
பணத்தை இவ்வாறு பறிகொடுத்தமை பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக குறித்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.