கனடாவில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டாலும் கூட தொற்று நோயைக் கட்டுப்படுத்தவதற்கான கூட்டு முயற்சிகள் பலனளிப்பதாக நாட்டின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் தொற்று நோய் தொடர்ந்து குறைந்து வருகிறது. தடுப்பூசி செயற்பாடுகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றன எனவும் அவா் கூறியுள்ளார். எனினும் கனேடியர்கள் தொடர்ந்தும் முன்னெச்சரிக்கையுடன் சுகாதார – பாதுகாப்பு வழிகாட்டல்களை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, ஐக்கிய இராச்சியத்தில் பரவிவரும் வேமாகப் பாவக்கூடிய கொரோனா பிறழ்வு வைரஸ் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சில பாடசாலைகளில் பரவியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 23 புதிய பிறழ்வு வைரஸ் தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேவேளை, 5 மாதங்களின் பின்னர் நேற்று மாகாணத்தில் குறைந்தளவாக 666 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். எனினும் இதன்மூலம் தொற்று நோய் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தவறாக எண்ணக்கூடாது என தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் எச்சரித்துள்ளார். புதிய பிறழ்வு வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை என்பதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனவும் அவா் கூறினார். இதற்கிடையில், ஒன்ராறியோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 1,087 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அதிகளவு தொற்று நோயாளர்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தப்படும் பகுதிகளில் வீட்டில் தங்குவதற்கான உத்தரவை மேலும் நீடிக்க மாகாண அரசு திட்டமிட்டுள்ளது. ரொரண்டோ, பீல் மற்றும் நோர்த் பே மற்றும் பாரி சவுண்ட் ஆகிய மூன்று பிராந்தியங்களில் வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவு நீடிக்கப்படவுள்ளது.