நல்ல வேலை, கைநிறைய ஊதியம், தங்குமிடம் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி கனடாவுக்கு வேலைக்கு வந்த புலம்பெயர்ந்தோரில் ஒருவர், பொலிசாரை நாடியதால் ஒரு பெரிய கடத்தல் கும்பல் சிக்கியுள்ளது.
பொலிசாருக்கு தகவல் கொடுத்த வெளிநாட்டுப் பணியாளர்
ரொரன்றோ பகுதியில் நல்ல வேலை இருப்பதாக ஆசைகாட்டி அழைத்துவரப்பட்ட மெக்சிகோ நாட்டவர் ஒருவர், மூட்டைப்பூச்சிகளும் கரப்பான் பூச்சிகளும் நிறைந்த ஒரு அறையில் ஒரு பாயில் இருவர் முடங்கிக்கொண்டு தூங்கும் ஒரு நிலையும், சொன்னதை விட குறைவான ஊதியமும் கொடுக்கப்படவே, கடுமையான வேலை வாங்கிக்கொண்டு சரியான ஊதியம் கூட கொடுக்கப்படாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து East Gwillimbury, Vaughan, ரொரன்றோ மற்றும் Mississauga பகுதிகளில் பொலிசார் ரெய்டுகளில் இறங்கினார்கள். அங்கு பணியாளர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த அறைகளின் நிலைமை கண்ட பொலிசாரே ஆடிப்போனார்களாம்.
கடத்தல்காரர்கள் கைது
இந்த ரெய்டுகளைத் தொடர்ந்து, இரண்டு கனேடிய குடிமக்கள் உட்பட நான்கு கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது 44 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இருவரை பொலிசார் தேடிவருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட 64 வெளிநாட்டுப் பணியாளர்களில் 53 பேர் அரசு வழங்கும் உதவியை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்கள்.
பிரச்சினை என்னவென்றால், இதுபோன்ற கடத்தல்கள், மோசடிகள் பல இடங்களில் நடக்கின்றன. ஆனால், அவற்றைக் குறித்துப் புகாரளித்தால், தாங்கள் நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் அதை வெளியே சொல்வதில்லை.
ஆகவே, இதுபோல் பாதிக்கப்படுவோரை நாடுகடத்தாமல், அவர்களுக்கு முறையான பணி அனுமதி வழங்கவேண்டும் என புலம்பெயர்தல் ஆதரவு சமூக ஆர்வலர்கள் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளதுடன், ஏற்கனவே அவ்வாறு செய்வதாக வாக்களிக்கப்பட்டுள்ள உதவிகளை விரைந்து செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.