Reading Time: < 1 minute

கனடாவின் அஸ்ட்ராஜெனெகா கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையே இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது.

அல்பர்ட்டா மாகாணத்தில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அரிதான இரத்த உறைவு நோயால் பாதிக்கப்பட்ட 50 வயதான பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக மாகாண தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டீனா ஹின்ஷா தெரிவித்தார்.

கடந்த மாதம் கியூபெக் மாகாணத்தில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற பின்னர் இரத்த உறைவால் பாதிப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதுவே தடுப்பூசி போட்டபின்னர் இரத்த உறைவுச் சிக்கலால் கனடாவில் பதிவான முதல் மரணமாக இருந்தது.

அஸ்ட்ராஜெனெகா கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இரத்த உறைவுச் சிக்கலால் பாதிக்கப்பட்ட 5 பேர் கனடாவில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அல்பர்ட்டாவில் இதுவரை 253,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் ஆபத்துக்களை விட நன்மைகளே அதிகம் இருப்பதாக கனேடிய சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலட்சத்தில் ஒருவரே தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அரிதான இரத்த உறைவுச் சிக்கலால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், இந்தச் சிக்கலுடன் தடுப்பூசிக்கு உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவா்கள் தெரிவிக்கின்றனது.

கனடாவில் இதுவரை மொத்தம் 12 இலட்சத்து 43 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 24,342 கொரோனா மரணங்களும் அங்கு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.