கனடாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தற்போது அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு வருவதாக கனடா பொது சுகாதார நிறுவனம் (PHAC) தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது கண்டறியப்படும் தொற்று நோயாளர்களில் 20 வீதமானவர்கள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என ஒட்டாவாவில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்தார்.
சிறுவர்கள் மத்தியில் அதிகளவான தொற்று நோயாளர்கள் கண்டறியப்படுவது எதிர்பாராதது என அவா் தெரிவித்தார். பெரியவர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில் தடுப்பூசி போடப்படாதமையே சிறுவர்கள் மத்தியில் தொற்று அதிகரிக்கக் காரணம் எனவும் அவா் கூட்டிக்காட்டினார்.
கனடா பொது சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி கனடாவில் 12 வயதுக்குட்பட்ட சுமார் 4.3 மில்லியன் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத சிறுவர்கள் உள்ளனர்.
05 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் கொவிட் தடுப்பூசி போட கடந்த புதன்கிழமை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஒப்புதல் வழங்கியது.
இதேவேளை, சிறுவர்களுக்குப் போடுவதற்காக கனடா ஏற்கனவே 2.9 மில்லியன் பைசர் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்துள்ளது. அத்துடன், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட மருந்துக் கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அதற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை.
சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்த மதிப்பாய்வுகளில் ஹெல்த் கனடா ஈடுபட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் கூறினார். இதற்கிடையில் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு மையங்களில் சிறிய கொரோனா கொத்தணிகள் உருவாகியுள்ளதாகவும் அவா் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக பெரியவர்களை விட சிறுவர்கள் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றனர். மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட சம்பவங்கள் அரிதாகவே உள்ளன எனவும் டாம் குறிப்பிட்டார்.
கடந்த மாதத்தில், கனடா முழுவதும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் கனடா முழுவதும் தினமும் சராசரியாக 2,230 தொற்று நோயாளர்கள் பதிவாகினர். தற்போதைய நிலை தொடருமானால் டிசம்பர் தொடக்கத்தில் தினமும் சுமார் 1,000 புதிய தொற்று நோயாளர்கள் வரை எதிர்பார்க்கலாம் எனவும் டாம் குறிப்பிட்டார்.
இருப்பினும், பொது சுகாதார நடவடிக்கைகளை முழுமையாக எளிதாக்குவது தொற்று நோய் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என டாம் எச்சரித்தார்.
“எங்கள் பாதுகாப்பு நடைமுறைகளைக் கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல.மேலும் எச்சரிக்கையான அணுகுமுறையைப் பராமரிப்பது குளிர்காலத்தில் எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்” எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
கனடா பொது சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி கனடா முழுவதும் இதுவரை 58.9 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி பெறத் தகுதியான 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள் தொகையில் 89 வீதத்திற்கும் அதிகமானவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் தகுதியான கனேடியர்களில் 84 வீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.
எனினும் 4 மில்லியன் கனடியர்கள் இன்னும் ஒரு தடுப்பூசியைக் கூட பெறவில்லை என்பதைத் தரவு காட்டுகிறது.