கிரேட்டர் வான்கூவர் உயிரியல் பூங்காவில் குழந்தை ஒன்று கரடிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த குடும்பத்தினர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த 2019 ஆகஸ்டு மாதம் தொடர்புடைய சம்பவமானது கிரேட்டர் வான்கூவர் உயிரியல் பூங்காவில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான புகார் கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து ரிச்சர்ட் ஹான்சன் என்பவர் தெரிவிக்கையில், தாக்குதலின் போது அவரது மகளுக்கு பலவிதமான காயங்கள் ஏற்பட்டதாகவும், அதில் ஒரு விரல் பகுதியளவு இழக்க நேர்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்தால் கடுமையான தனிப்பட்ட காயங்கள், இழப்புகள் மற்றும் சேதங்களை ஏற்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. முறையான தடுப்பு வேலிகள் அமைக்க பூங்கா நிர்வாகம் தவறியதாக குற்றஞ்சாட்டியுள்ள ஹான்சன், இதன் காரணமாகவே தமது 3 வயது மகள் தாக்குதலுக்கு இலக்கானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஹான்சன் கூறிய குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், கிரேட்டர் வான்கூவர் பூங்கா இதுவரை பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.
இதனிடையே, தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியானது பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதி அல்ல என கிரேட்டர் வான்கூவர் உயிரியல் பூங்காவின் விலங்குகள் பராமரிப்பு இயக்குனர் மெனிதா பிரசாத் தெரிவித்துள்ளார்.